சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் விஜய் உடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஆலோசனை செய்து நிலையில், இன்று ஆதவ் அர்ஜுன், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பிரசாந்த் கிஷோர் ஆகியோர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனை முடிவில், தற்போதைய நிலவரத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு உள்ள வாக்கு தொடர்பான விவரங்களை தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் என். ஆனந்திடம் அறிக்கையாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் எவ்வாறு பணியாற்றினால் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்தும் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. எந்த எந்த வயதினர் வாக்குகளை செலுத்த தயாராக உள்ளனர். எந்த பகுதியில் அதிக வாக்குகள் உள்ளது என்பது குறித்தும் தெரிவித்து உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் பூத் கமிட்டியை முறையாக அமைத்து தேர்தல் வரை எவ்வாறு வலுப்படுத்தி செயல்பட வேண்டும், சமூக ஊடக பிரச்சாரம், கட்சிக்கு முறையாக ஐடி விங் அமைத்து அதை தேர்தல் வெற்றியை நோக்கி செயல்படுத்துவது, 2026 தேர்தல் வரை பல்வேறு வகையில் அரசியல் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள நிலையில் அந்த சூழ்நிலைகளில் அவற்றை எவ்வாறு கையாள்வது போன்ற முக்கிய ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரம் எவ்வாறு மேற்கொள்வது, எதிர்கட்சிகள் பற்றி எவ்வாறு விமர்சிப்பது என்று பல கோணங்களில் ஆலோசனை நடந்துள்ளது. அதேபோன்று பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து அவ்வப்போது ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் என்.ஆனந்த்,ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகிய மூவரும் பையனூரில் நடைபெற்று வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஜயை சந்தித்து ஆலோசித்து வருகின்றனர். பிரசாந்த கிஷோர் கொடுத்த அறிக்கையுடன் விஜயை மூவரும் சந்தித்தனர்.
இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகளும் இடம்பெற்றுள்ளன.