மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாயேஸ்வர சுவாமி கோயிலில் எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு 49 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 1 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. 10 ஆம் நாள் சிகரநிகழ்வான தை பூச தினமான இன்று மூவலூர் காவிரி
பிப்பலர் தீர்த்த கட்டத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் விரதமிருந்த பக்தர்கள் மேள வாத்தியங்கள் முழங்க பால் குடம், திருமஞ்சனம், காவடி, அலகு காவடி எடுத்து வீதியுலாவாக கோவிலை வந்தடைந்தனர். வழி நெடுகிலும் பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் வேண்டுதலாக எடுத்து வந்த பால்குடத்தை கொண்டு சுவாமி அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை வெள்ளி கவச அலங்காரமும், இரவு வீதியுலாவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.