தேனி அருகே பழனிச்சட்டிப்பட்டியில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடை நடத்தி வருபவர் மணியரசன். பிரதான நெடுஞ்சாலை ஓரம் உள்ள இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த கக்கன்ஜி காலனி தெருவை சேர்ந்த குமார் (40) என்பவர் அடிக்கடி வந்து கறி வாங்கி சென்று வருவது வழக்கம். குமார் மயானத்தில் குழி வெட்டுவது, காலி மது பாட்டில்களை சேகரிப்பது என கிடைக்கும் வேலையை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். போதைக்கு அடிமையான குமாரின் பேச்சு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மணியரசன் இறைச்சி கடையில் குமார் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மணியரசன் கடைக்கு அடிக்கடி வரும் குமாருக்கு இறக்கப்பட்டு இலவசமாக கறி கொத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று குமார் , மணியரசன் கடைக்கு வந்து அரைகிலோ கறி இலவசமாக கேட்டுள்ளார். அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்கு மணியரசன் இறைச்சி வெட்டி கொடுத்துக் கொண்டிருந்தால். இலவசமாக கறி கொடுப்பதற்கு மறுத்துள்ளார், தொடர்ந்து இலவசமாக இறைச்சி கேட்டு தொந்தரவு செய்த குமாரை மணியரசன் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து குமார் மணியரசனுடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற குமார் சிறிது நேரம் கழித்து துணியால் சுற்றப்பட்ட ஒன்றை சுமந்தபடி வந்து மணியரசன் கடைக்கு முன்பு வைத்துள்ளார். பின்னர் துணியை பிரித்து போது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். துணிகளுக்கு உள்ளே எழும்புக்கூடாக இருக்கும் ஒரு மனித சடலம் ஒன்று இருந்தது. சடலத்தை கடையின் முன்பு வைத்து மீண்டும் இலவசமாக இறைச்சி கேட்டு குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனிசெட்டிபட்டி காவல் துறையினர். சடலத்தை கைப்பற்றி அருகில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்று மீண்டும் புதைத்தனர். சடலத்தை எடுத்து வந்த குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இறைச்சி கடை உரிமையாளர் மணியரசன் அளித்த புகாரின் அடிப்படையில் மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பொது இடத்தில் சடலத்தை வைத்து பொது மக்களுக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் குமார் மீதி வழக்கு பதிவு செய்த பழனிச்செட்டிபட்டி காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இறைச்சி கடை மனித சடலத்தை வைத்து பிரச்சினை செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.