தமிழக அரசு மற்றும் “உயிர்” என்ற அரசு சாரா சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு தொடர்பான புதுமை கண்டுபிடிப்பு சிந்தனைகளை உருவாக்கும் முன்மாதிரி போட்டியான “உயிர்” சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் 2025, மென்பொருள் மற்றும் வன்பொருள் திட்ட உருக்கள் மற்றும் முன்மாதிரிகள் வடிவமைப்பு போட்டிகளின் இறுதிச்சுற்று, நேற்றும் இன்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் நிறைவு விழா இன்று மாலை 5 மணி அளவில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை விருந்தினராக கலந்து
கொண்டார். கௌரவ விருந்தினர்களாக, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் , கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், ‘உயிர்’ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், ‘உயிர்’ அமைப்பின் அறங்காவலரும் இந்நிகழ்வின் திட்ட பொறுப்பாளரும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமாகிய மலர்விழி உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து மாணவ – மாணவியர், தொழில் நுட்ப நிபுணர்கள் என மொத்தம் 145 குழுவினர் பங்கேற்றனர். போட்டியின் இறுதியில், நிபுணர்கள் பிரிவில் வெற்றி பெற்ற முதல் மூன்று குழுவினருக்கும் மாணவர்கள் பிரிவில் வெற்றி பெற்ற முதல் மூன்று குழுவினர்களுக்கும் சிறப்பாக பங்காற்றிய குழுவினர்களுக்கும், சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகளை வழங்கினார்.