மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள வங்கி ஒன்றில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட தங்க நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது.
அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 1403 கிராம் எடை கொண்ட
21 நகை பைகளில் போலி நகைகளை அடகு வைத்து, வாடிக்கையாளர் பெயரில் அடகு கடன் பெற்றதும், அந்த வகையில் ரூ.60 லட்சம் பணமோசடி நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, வங்கி மேலாளர் தினேஷ் அளித்த புகாரின்பேரில் நடைபெற்ற விசாரணையில், வாடிக்கையாளர்கள் நகைக்கடன் கேட்டு வரும்போது, அவர்களை ஏமாற்றி இரண்டு ஆவணங்களில் கையொப்பம் பெற்று, அவர்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்தது. ஆவணங்களில் கையொப்பம் பெற்றதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ரூ.20 லட்சம் வரை திருப்பி செலுத்தியுள்ளார்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஜீவானந்தம் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து, கடந்த 2ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட ஜீவானந்தம் மாரடைப்பு இறந்துவிட்டதாக 8ஆம்தேதி உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு 9ஆம்தேதி உடலை பெற்றுசெல்லுமாறு சிறைத்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் உடல் இன்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஜீவானந்தம் சாவில் மர்மம் உள்ளதாகவும் உரிய விசாரணை செய்யவேண்டும் என கூறி அவரது உறவினர்கள் மயிலாடுதுறைக்கு திரும்பியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.