ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 05ம் தேதி நடைபெற்றது. அதிமுக, பாஜக, தேமுதிக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தன. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்று வருகிறார். திமுக வேட்பாளர் சந்திரகுமார் 35,407 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 6,876 வாக்குகள் மட்டுமே பெற்று பின் தங்கியுள்ளார். இதன் மூலம் திமுக வேட்பாளர் சந்திரகுமாரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.