தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.63,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் ஜெட் வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் வரலாற்றில் முதன் முறையாக ரூ.63 ஆயிரத்தை தங்கம் விலை தொட்டுள்ளது. ஆபரணத் தங்கம் தினம் தினம் புது உச்சத்தை தொட்டு வருவதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.62,000 என்ற விலையைத் தொட்டு மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளான கடந்த திங்கள்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.7,705க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ஒரு பவுன் ரூ.61,640க்கும் விற்பனையானது. இது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனால் இந்த ஆறுதல் என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது.