மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம் 4 நாட்களுக்கு மட்டும் பேசி விட்டு விடாமல் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டி
மனிதநேய மக்கள் கட்சியின் 17 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் தென்னூரில் நடைபெற்ற நிலையில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது பங்கேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது,”மணப்பாறை தனியார் பள்ளி மாணவி பாலியல் சீண்டல் விவகாரம் மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு 5 பேரை கைது செய்துள்ளது.இது போன்ற பாலியல் விவகாரங்களில் கைது மட்டுமே தீர்வாக அமையாது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சொல்வது போல் பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசியர்கள் கல்வித்துறையில் இருந்தே தூக்கி எறியப்பட வேண்டும்.
கல்வித்துறையில் மீண்டும் நுழைய முடியாத படி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.இது போன்ற விவகாரங்கள் ஊடங்கங்களில் 4 நாட்கள் பேசி மட்டும் விட்டு விடாமல் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.CCTV கேமராக்கள் வந்தும் கூட இது போன்ற அநியாயங்கள் தனியார் பள்ளியில் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாரந்தோறும் ஆய்வு கோட்டம் நடத்தி மாணவர்களிடம் கருத்து கேட்க வேண்டும் .இது போன்ற முயற்சிகள் காரணமாக தான் பிள்ளைகள் பெற்றோர்களிடத்தில் சொல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.இது போதாது இன்னும் விரிவுபடுத்தி பெண் பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.மாணவர்கள் கற்றோராக வருவதற்கு எந்த ஒரு தடையும் நாட்டில் இருக்கக் கூடாது” என்றார்.