மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பூஜா கேட்கர் என்பவரின் தேர்ச்சியை ரத்து செய்து UPSC அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. எதிர்காலத்தில் அவர் குடிமைப்பணிகள் தேர்வை எழுத நிரந்தர தடை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளனர். போலி சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிக்கான இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தி பணியை பெற்றதாகவும், சொத்து மதிப்பை குறித்து பல புகார் வந்ததாலும் பூஜா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு UPSC சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அதன்படி தற்போது UPSC முதல்நிலைத் தேர்வுக்கு செய்யும் விண்ணப்பங்களில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது.
இது வரை கேட்கப்படாத பல கேள்விகள் அதில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, பெற்றோரின் ஆண்டு வருமானம், சொத்து வருமானம், அதற்கான ஆவணங்கள், அவர்களது பான் கார்டு விவரம், மற்றும் விண்ணப்பதாரரின் பொழுது போக்கு, உள்ளிட்ட பல புதிய கேள்விகள் அதில் கேட்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக இதுபோன்ற கேள்விகள், UPSC இறுதிக்கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது தான் கேட்கப்படும். அந்த கேள்விகள் இப்போது பிரிலிமினரி என்னப்படும் முதல்நிலைத் தேர்விலேயே கேட்டு உள்ளனர். இதனால் விண்ணப்பதாரர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.