ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 5ம் தேதி நடந்தது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதே தொகுதிக்கு கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனால், கடந்த இடைத்தேர்தலை விட தற்போது 6.82 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதிமுக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலை புறக்கணித்தால் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. இதனால் இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளதாக அதிகாரிகளும் அரசியல் கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 9 மணி அளவில் முதல் சுற்று முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 30 நிமிடத்திற்கு ஒரு முறை முடிவுகள் வெளியாகும். மதியம் 2 மணிக்கு முழு முடிவுகளும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.