ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ம் தேதி மரணமடைந்ததையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 7ம் தேதி அறிவித்தது. அதிமுக, பாஜ, தேமுதிக போட்டியிடவில்லை. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளராக சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். 2023 இடைத்தேர்தலில் 74.79 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இளங்கோவன் – 1 லட்சத்து, 10,156 ஓட்டும், அ.தி.மு.க., தென்னரசு, 43,923 ஓட்டும் பெற்றனர். வெற்றி வித்தியாசம், 66,233 ஓட்டாக இருந்தது.
தற்போதைய இடைத்தேர்தலில், காங்.,குக்கு பதில் தி.மு.க.,வே நின்றதாலும், சீமான் கட்சி போட்டியிட்டதால் தி.மு.க., பெரிதாக பிரசாரம் செய்யவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 85 வயதுக்கு மேற்பட்ட 209 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் 47 வாக்காளர்கள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர். இதில், 246 பேர் தபால் வாக்களித்தனர். நேற்று காலை வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.. காலை 9:00 மணி நிலவரப்படி, 10.95 சதவீதம், 11:00 மணிக்கு, 26.03 சதவீதம், மதியம் 1:00 மணிக்கு, 42.41 சதவீதம், மதியம் 3:00 மணிக்கு, 53.63 சதவீதம், மாலை 5:00 மணிக்கு, 64.02 சதவீதம், மாலை 6:00 மணிக்கு 68 சதவீதம் என ஓட்டு பதிவானது. வாக்குப்பதிவு முடிந்த 6 மணி நிலவரப்படி 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2023 பிப்ரவரி 27ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. தற்போதைய இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 72 சதவீதம் வாக்குகள் பதிவானது. 2023ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை விட, இந்த இடைத்தேர்தலில் 2.79 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளன. வரும் 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.