Skip to content

முதல்வருக்கு நன்றி தெரிவித்த காடுவெட்டி குருவின் மகன், மகள்

  • by Authour

வன்னியர் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்து தந்த தமிழ்நாடு அரசிற்கும் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி, காடுவெட்டி குரு அவர்களின் மகள் விருதாம்பிகை மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Image

வன்னியர் சமூக மக்களுக்கு 20 சதவிகத இட ஒதுக்கீடு கேட்டு 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் நடத்தியதில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டு அமைந்த முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு , இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்து கொடுத்து , அவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டினை வழங்கி கல்வியிலும் , வேலைவாய்ப்பிலும் சமவாய்ப்பை ஏற்படுத்தினார். 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு , மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற பேரவை விதி எண் 110 ன் கீழ் , 2.09.2021 அன்று ” 1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்ககூடிய வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் ” என்று கூறினார். அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் , 21 சமூக நீதி போராளிகளுக்கு 5 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை கடந்த மாதம் 28 ஆம் தேதி நேரில் சென்று முதலவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் , இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் , வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி , காடுவெட்டி குரு அவர்களின் மகள் விருதாம்பிகை மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது , வன்னியர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 21 சமூக நீதி போராளிகளிக்கு மணிமண்டபம் அமைத்த தமிழ்நாடு அரசிற்கும் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது , அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முதல்வர் உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் , வன்னியர் சமூக மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் நான் பேசியவுடன் , நிச்சயம் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் கூறியிருந்தார். அதற்கு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளேன் என்றார். அதே போல் , இலங்கை தமிழர்கள் விவகாரம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடத்தில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காடுவெட்டி குரு அவர்களின் மகள் விருதாம்பிகை மற்றும் காடுவெட்டி மனோஜ் , இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டித் திறந்த முதலமைச்சருக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம் என கூறினர். மேலும் , வன்னியர் சமூகம் சார்ந்த பல கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்திருப்பதாகவும் அதை நிறைவேற்றி தருவதாக முதல்வர் கூறியுள்ளார் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மறைந்த காடுவெட்டி குருவுடைய பிறந்தநாள் விழாவிற்கு அனுமதி கேட்ட நிலையில் , அரசும் அனுமதி அளித்திருந்தது. அதே போல் காடுவெட்டி குரு அவர்களுக்கு வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த இரண்டு நிகழ்வுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் மாண்புமிகு முதலவர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தோம் என தெரிவித்தனர்.

error: Content is protected !!