தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டார். தற்போது தான் மாவட்ட செயலாளர்கள் பொறுப்புகளை பெரும்பாலான பகுதிகளுக்கு நியமித்துள்ளார். மொத்தம் 120 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இன்னும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பொறுப்புகள் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.
இப்படியான சூழலில், அடுத்தகட்டமாக நகரம், ஒன்றியம், வட்டம் உள்ளிட்ட பகுதி கட்சி பொறுப்புகளுக்கு தகுதியான நபர்களை நியமனம் செய்ய தற்போது வரையில் நியமனம் செய்யப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கான உத்தேச பட்டியலை ஒரு வாரத்திற்குள் தயார் செய்து அனுப்ப வேண்டும் என கட்சி தலைமை குறிப்பிட்டுள்ளது. இதனால் நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தோராயமாக 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு 1 மாவட்ட செயலாளர் வீதம் மொத்தம் 120 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு நியமனம் செய்யப்பட்டு வருகிறது . இதுவரை 5 கட்டங்களாக 95 மாவட்ட செயலாளர் பொறுப்பு நியமனம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டுமே இன்னும் இழுபறி நிலை நீடிக்கிறது.