Skip to content

பறக்குது தங்கம்

 பறக்குது   தங்கம்

தங்கம் …….  இனி சாமான்ய மக்கள் அணிந்து மகிழ முடியாது.   தங்கள் குழந்தைகளுக்கு தங்கமே தங்கம் என பெயர் சூட்டி மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம்.

அந்த அளவுக்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  உலகில்  மிக விலை உயர்ந்த  உலோகமாக கருதப்பட்டது  பிளாட்டினம்.  சில ஆண்டுகளுக்கு முன் வரை  பிளானட்டினத்தின் விலையில் பாதி தான் தங்கத்தின் விலையாக இருந்தது. வெளிநாட்டினரும்,  பெரும் செல்வந்தர்கள் என சொல்லிக்கொள்பவர்களும் தங்கத்தை விட பிளாட்டின நகைகளையே அணிந்து இருந்தனர்.

இன்றைய நிலவரப்படி  தங்கம்,  பிளாட்டினத்தை   பின்னுக்கு தள்ளி ,   கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போட்டியாளர்களே இல்லை என்று ஓடிக்கொண்டே இருக்கிறது. இல்லை……. இல்லை   பறந்து கொண்டு இருக்கிறது.

1942ல்  இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை  வெறும் 44 ரூபாய் . 1947ம் ஆண்டில் 10 கிலோ தங்கத்தின் விலை டில்லியில் இருந்து மும்பைக்கு விமான டிக்கெட்டுக்கான விலையை விட குறைவாக இருந்தது. 1947ல்  தங்கம் விலையானது 88.62 ரூபாயாக இருந்தது.

இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை  ஏறிக்கொண்டு தான் போனது.  2000 ம் ஆண்டில்  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 440க்கு உயர்ந்தது. அப்போதே மக்கள்  தங்கம் விலை  இவ்வளவு உயர்ந்து விட்டதா என  அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.

தங்கத்தின்  அபரிவிதமான   விலை உயர்வுக்கு காரணம்….. மக்களுக்கு  அதன் மீதான  ஆசை, நுகர்வு  தான் காரணம்.

இந்தியாவில் ஆண்டுக்கு தங்கத்தின் நுகர்வு    800 முதல் 850 டன்கள்.  தங்கம் வாங்குவதில், நகரம், கிராமம் என இல்லை. எல்லா தரப்பு மக்களும் தங்கத்தின் மீது  பேராசை கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது  ஆய்வு கூறும் தகவல்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகமே தங்க பைத்தியம் பிடித்து தான் அலைகிறது. அது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம்.
மக்களின் நுகரும் சக்தி உயர்ந்த அளவுக்கு தங்கம்  உலகில்  கிடைப்பதில்லை.   விலை உயர்வுக்கு இதுவும்  ஒரு காரணம்.
 இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும்  குறிப்பாக பெண்கள் தங்கத்தை தங்கள் சேமிப்பாக கருதி சிறுக சிறுக  சேமித்து தங்கத்தை  வாங்குகிறார்கள்.  குறிப்பாக தமிழ்நாட்டில்   வீடுகளில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் தங்கம் தான்  தலையாய  இடத்தை பிடிக்கிறது. குறிப்பாக திருமண நிகழ்வுகளில்  தங்கமே  பிரதானமாக பார்க்கப்படுகிறது.
இதனால் தான் இன்று  ஆபரணத்  தங்கத்தின் விலை  ஒரு பவுனுக்கு 63 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது  ஏற்ற இறக்கங்களுடன்  விளையாட்டு காட்டினாலும்,  திடீரென  வீழ்ச்சி அடைய வாய்ப்பு இல்லை. தங்கம் எப்போதும் தங்கம் தான். எனவே  இது தான் நமக்கு சேமிப்பின்  அடையாளம் என  சாதாரண சாமான்ய மக்களும் பார்க்கிறார்கள்.

தற்போது வரை  1,97,000 டன்  தங்கம்   வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் 57 ஆயிரம் டன்  இருப்பு உள்ளதாகவும்  உலக தங்க கவுன்சிலின்  தரவுகள் கூறுகிறது.  தற்போதைய நிலவரப்படி உலகிலேயே அதிகம் தங்க இருப்பைக் கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சுமார் 8,133.4 டன் தங்கத்தை  அமெரிக்கா இருப்பில் வைத்துள்ளது. , இது உலகின் மொத்த தங்க இருப்பில் 25%  ஆகும்.
அடுத்ததாக ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கம் அதிகம் வைத்திருக்கின்றன. இந்தியாவிடம் 795 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது.இதனால் அதிகம் தங்கம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக  மக்களைப்போல, நாடுகளும் தங்கம்  சேமிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். 

தங்கம்   சிறந்த சேமிப்பாக இருப்பதுடன், அவசர காலங்களில் பயன்படுவதாகவும் இருக்கிறது.  எனவே  தங்கம்  எப்போதும்   மதிப்பு உயர்ந்ததாகவே இருக்கும். அது  சிறந்த  சேமிப்பாகவும் இருக்கும். எனவே அது தனது இறக்கைகளை விரித்து  பறந்து கொண்டே  தான் இருக்கும்.
தங்கம் வாங்குவது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறியதாவது: இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், வரும் காலத்திலும் இதுவே நடக்கும் என்பதால் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளத் தங்கம் உதவும் . இந்தியர்கள் அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்வதே சிறந்தது என கருதுகிறார்கள்.  தங்கத்தை  ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக கொண்டு சென்று விடலாம். மற்ற சொத்துக்களை அப்படி  இடம் பெயர செய்ய முடியாது . எனவே தங்கத்தில் மக்கள்  அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
இவ்வாறு ஆனந்த் சீனிவாசன் கூறினார்.

error: Content is protected !!