‘ஒத்த ஓட்டு முத்தையாவை, வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள்’ என்று ‘ஒத்த ஓட்டு முத்தையா’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவுண்டமணி கூறியுள்ளார். ’ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர். இப்படத்தின் இயக்குநர் சாய் ராஜகோபால் சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அரசியல் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். சினி கிராப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவிராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்யராஜ், பி.வாசு, சினேகன் போன்றோர் கலந்துகொண்டு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தைப் பற்றி பேசினார்கள். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய கவுண்டமணி, “என்ன பேசுறதுன்னு தெரியல. எனக்கு முன்னாடி பேச வந்த பிரபலங்கள் எல்லோரும் ’ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தை பத்தி பேசிட்டு போயிட்டாங்க. குடும்பத்தோடு வந்து பார்க்கவேண்டிய படம் இது. எல்லோரும் வந்து பாருங்கள். இந்த ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையவாக மாற்றுங்கள். விழாவிற்கு வந்திருக்கும் ரசிகர்கள், வராத ரசிகர்கள் என எல்லோருக்கும் நன்றி ” என்று கூறி இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.