கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை, காரில் கடத்தி வருவதாக, கரூர் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு கடந்த 30k; njjp , தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெங்கமேடு அருகே சின்ன குளத்துப்பாளையத்தில், தனிப்படை உதவி ஆய்வாளர் உதயகுமார், தாந்தோணிமலை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார், உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 168 கிலோ (1.34 லட்ச ரூபாய் மதிப்பு), புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அந்த காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கேவர்சன் (40), சுரேஷ் (19), ஹரிராம் (27), ஆகிய 3 பேரை வெங்கமேடு உதவி ஆய்வாளர் சித்ரா தேவி கைது செய்து, கரூர் கிளை சிறையில் அடைத்தார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேரிடம் இருந்து, 1.25 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, பதுக்கி விட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, போலீசாரிடம் விசாரணை நடத்த, திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 8 பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் உதயகுமார், சித்ராதேவி மற்றும் 5 போலீசாரிடம், திருச்சி மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.