கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் சுபா தம்பதியருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு காது குத்த முடிவு செய்த தம்பதியர் காதணி விழா நடத்த திட்டமிட்டனர். இதனிடையே காது குத்துபோது குழந்தைக்கு காது வலிக்காமல் இருப்பதற்காகமயக்க ஊசி போட அவர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்தின் டாக்டராக பணியாற்றும் நாகராஜ் என்பவர் குழந்தைக்கு இரு காதுகளிலும் மயக்க ஊசி செலுத்தி உள்ளார்.
இதற்காக டாக்டர் ரூ. 200 கட்டணமாக வசூலித்துள்ளார். குழந்தைக்கு அதிக வீரியம் கொண்ட மயக்க ஊசியை போட்டதால் குழந்தையின் வாயில் இருந்து நுரை வந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை மாவட்ட அரசு தலைமை மருந்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாலுகா சுகாதார அதிகாரி டாக்டர் அலீம் பாஷா கூறுகையில், “காது குத்தும்போது வலி ஏற்படாமல் இருக்க டாக்டர் மயக்க மருந்து கொடுத்துள்ளார். பின்னர் குழந்தை வலிப்பு ஏற்பட்டு இறந்தது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும். டாக்டரின் அலட்சியம் உறுதிசெய்யப்பட்டால், நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
காது குத்துவதற்காக மயக்க ஊசி போட்டதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.