கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. பலரும் சிறுவனுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டனர். சொல்லப்போனால், மழலையின் இந்த அப்பாவி கோரிக்கை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது.
அங்கன்வாடியில் பேசிய அந்த குழந்தையின் வீடியோ அம்மாநில அரசின் கண் முன்பே சென்றடைந்துள்ளது. அட ஆமாங்க… கேரள மாநில சுகாதாரம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது பேஸ்புக் பக்கத்தில், குழந்தை பேசும் அழகான காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
வீடியோவில் அந்த சிறுவன் “அங்கவாடியில் உப்புமாவிற்குப் பதிலாக பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும்” என்று அழகாக கோரிக்கை வைத்திருக்கிறார். இதனை குறிப்பிட்டு “ஷங்குவின் கோரிக்கை ஏற்று கொள்கிறோம். விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கிறோம்” என தெரிவித்த அமைச்சர் வீணா ஜார்ஜ், ‘குழந்தைகள் சிறந்த ஊட்டச்சத்தைப் பெறும் வகையில், அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவுப் பட்டியல் விரைவில் அரசு மறுஆய்வு செய்யும் ‘என்று தெரிவித்திருக்கிறார்.
அங்கன்வாடி (Anganwadi) என்பது இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். இங்கு பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன. கேரளாவில் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடிகள் மூலம் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.