Skip to content

திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம், திருவையாறில் தருமபுர ஆதீனம் மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப்பட்டது. மேற்குக் கோபுரம் முதல் சுற்று, நடை திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தெற்குக் கோபுரம் ஆகியவை ஆணையபிள்ளையும், அவருடைய தம்பி வைத்தியநாதரும் எழுப்பியவை.

இங்குள்ள வட கயிலாயம் என்ற ஒலோக மாதேவீச்சரம் முதலாம் ராசராச சோழனின் மனைவி ஒலோக மாதேவியால் கட்டப்பட்டது. தென் கயிலாயம் கோயிலை கங்கை கொண்டான் என்றழைக்கப்படும் முதலாம் ராசேந்திர சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால் கட்டப்பட்டது. முதலாம் ராசராச சோழன் காலத்தில் இந்த ஊர் பொய்கை நாட்டுத் திருவையாறு என அழைக்கப்பட்டது. இங்கு ஞானசம்பந்தர், திருநாவுச்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்

என அனைத்து நாயன்மார்களும் பாடியுள்ளனர். இக்கோயிலுக்கு நிறைய பதிகங்கள் பாடப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் நிறைவடைந்து மகாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 29ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து ஐந்து யானைகள் மீது புனித நீர் ஊர்வலமாக யாகசாலை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு முதல் கால யாகசாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து 3 நவா கனி, 7 பஞ்சா கனி, 30 ஏகா கனிகள் என 92 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 110 சிவாச்சாரியர்கள். 108 வேத விற்பன்னர்கள், ஓதுவார்கள் திருமுறை பாட புனித நீர் அனைத்து கோபுர கலசங்களுக்கும் கொண்டு வரப்பட்டு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக சாலை மண்டபத்தில் இருந்து சிவாச்சாரியர்கள் புனித நீர் கலசத்தை தலையில் சுமந்து சிவகணங்கள் இசைக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு கொண்டு வந்தனர்.

விமானம், மற்றும் ராஜ கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டன. அப்போது கூடியிருந்த திரளான பக்தர்கள் ஐயாரப்பா என பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருவையாறில் திரண்டதால் திருவிழா கோலம் பூண்டிருந்தது.

error: Content is protected !!