Skip to content

தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு ….

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. அப்போது தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தேப்பெருமாநல்லூர் ஊராட்சி இந்நாள் வரை சிறந்த ஊராட்சியாகவே இருந்து வருகிறது. இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நாங்கள் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளர்கள் . எங்களின் வாழ்வாதாரம் ஊராட்சிக்கு உண்டான, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வரும் சம்பளத்தில் இருந்து தான் கிடைக்கிறது. கூலி வேலை இல்லாத நாட்களில் எங்கள் குடும்பத்திற்கு 100 நாள் வேலை திட்ட சம்பளம் தான் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

மேலும் அரசின் பசுமை வீடு கட்டும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் காய்கறி சந்தை, அரசால் வழங்கப்படும் ஆடு மாடு வளர்ப்பு திட்ட நிதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியால் சிறு, குறு விவசாய கடன்கள். மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் மூலம் எங்கள் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் பலன் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் உள்ள எங்கள் பகுதியை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக ( நகர் பகுதி ) அரசாணை வெளிவந்ததாக நாங்கள் அறிகிறோம். இந்த அறிவிப்பு எங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. மாநகராட்சி ஆகும் பட்சத்தில் இது போன்ற திட்டங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும் பல்வேறு வகையில் அதிக வரி சுமைக்கு ஆளாக நேரிடும். இதனால் பெரிதும் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கள ஆய்வு செய்து தொடர்ந்து தேப்பெருமாநல்லூர் ஊராட்சியாகவே செயல்பட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!