புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் வேங்கைவயலை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, சி.பி.சி.ஐ.டி.யின் குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் எனவும் புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிபதி, இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டம் நீக்கப்பட்டதை ஏன் புகார்தாரருக்கு தெரிவிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இது தொடர்பாக புகார்தாரருக்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவரால் வர முடியவில்லை என்று எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டம் நீக்கப்பட்டதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதோடு, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்கள் என்று யாரும் இல்லை என்றும், சம்பவத்தின்போது மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்த குடிநீரை யாரும் குடிக்கவில்லை என்றும் விளக்கமளித்த அரசு வழக்கறிஞர், இதற்கான ஆதாரம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வசந்தி, இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.