Skip to content

டில்லியில் 7 எம்.எல்.ஏ.க்கள் திடீர் பதவி விலகல்

டெல்லியின் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற பிப்.5 அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெற வெறும் 5 நாள்களே உள்ள சூழலில் இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேர் ஒரே நேரத்தில் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

 

இந்நிலையில், கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜ்வாஸன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஎஸ் ஜூன் முதலில் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்பித்தார். அவரைத் தொடர்ந்து, நரேஷ் குமார் யாதவ் (மெஹரௌலி), ரோஹித் குமார் (திரிலோக்புரி), ராஜேஷ் ரிஷி (ஜானக்புரி), மதன் லால் (கஸ்துரிபா நகர்), பவன் ஷர்மா (ஆதார்ஷ் நகர்) மற்றும் பாவனா கவுட் (பாலம்) ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்து கடிதத்தை சமர்பித்துள்ளனர்.

திடீரென எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து 7 பேரில் ஒருவரான பாவன கவுட் தனது ராஜிநாமா கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவாலின் மீதிருந்த நம்பிக்கையை தான் முழுவதுமாக இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பதவி விலகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சி அதன் கொள்கைகளை மீறி செயல்பட்டு ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக, தற்போது பதவி விலகிய டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேருக்கும் இம்முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர்களது தொகுதிகளில் போட்டியிட புதிய வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!