Skip to content

புதுகை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள  வெங்களுரைச் சேர்ந்த சமூக  ஆர்வலர்  ஜெகபர் அலி ஜனவரி 17ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக  திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து    கல் குவாரி அதிபர்   ராசு ,   லாரி டிரைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக  ஜெகபர் அலி மனைவி மரியம்  மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  அதில் அவர்,   என் கணவர்  திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்.  ஜனவரி 18ம் தேதி மாலை 4 மணியளவில் உடற்கூறாய்வு செய்யப்பட்டாலும், அறிக்கை தரப்படவில்லை.

உடற்கூறாய்வு தொடர்பான காணொளிப் பதிவு கோரிய எங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 10 நாட்கள் தாமதத்திற்கு பின்பு உடற்கூறாய்வு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலில் நடைபெற்ற உடற்கூறாய்வு உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டாலும், அதன் முதல் தகவல் அறிக்கை எங்களுக்கு வழங்கப்படவில்லை.

இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள தடய அறிவியல் பரிசோதனை நிலையத்தில், அனைத்து வசதிகள் இருந்தும், திருமயம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ததும், காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போதுமான தடயங்களை சேகரிக்க தவறியதும் வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்லுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே, ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து, இரண்டு தடய அறிவியல் நிபுணர்களோடு, எங்கள் நிபுணரையும் இணைத்து, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுத்து, மறுஉடற்கூறாய்வு செய்யவும், அதனை காணொளியாகப் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு  நேற்று  நீதிபதி நிர்மல் குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் உடற்குறாய்வு செய்த மருத்துவர் ஆஜராகி, லாரி ஏறியதில் ஏற்பட்ட எலும்பு முறிவுகளும், உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட காயமுமே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதி லாரி ஏரி இறங்கியதில் ஏற்பட்ட எலும்பு முறிவும், காயமுமே இறப்பிற்கு காரணம் என்பது அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எக்ஸ்-ரே எடுக்க வேண்டியது அவசியம் என்ன? இதனால் இச்சம்பவத்தை அரசியலுக்காகவும் விளம்பரத்திற்காகவும் பயன்படுத்த நேரிடலாம் என கருத்து தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் எக்ஸ்-ரே எடுப்பது செய்வது கூடுதல் ஆவணமாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. மறுபுறம் அரசுத்தரப்பில், ஜகபர் அலியின் உடலை அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே எக்ஸ்-ரே செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, “புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இணைந்து தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட எக்ஸ்-ரே செய்ய தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

திருமயம் தாசில்தார் முன்னிலையில், போதிய காவல்துறை பாதுகாப்புடன், ஜகபர் அலியின் உடல் புதைக்கப்பட்ட இடம் சுற்றிலும் மறைக்கப்பட்டு, எக்ஸ்ரே எடுக்கப்பட வேண்டும். ஊடகங்கள் மற்றும் வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது. செல்போனில் புகைப்படங்களை எடுக்கவும் அனுமதிக்க கூடாது.

உடல் ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே செய்யப்படுவது தொடர்பான எந்த புகைப்படமும் விசாரணைக்காக அன்றி, வேறு இடங்களில் பகிரப்படக்கூடாது. எக்ஸ்-ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதும் காணொளியாக பதிவு செய்யப்பட்டு, விசாரணை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்,” என்றார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை ஜெகபர் அலி உடல் தோண்டி எடுக்கப்பட்டது.  சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்  புவனேஸ்வரி மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே   எக்ஸ்ரே எடுக்கும் பணியும் தொடங்கியது.

 

error: Content is protected !!