திருச்சி மாவட்டம், சிறுகளப்பூ பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி 40 வயதுடைய வேம்பு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வேம்புவிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் நகையை வழிப்பறி செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூரை சேர்ந்த செங்கமலை மகன் சுரேஷ், மருதமுத்து மகன் புண்ணியமூர்த்தி இருவரும்தான் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் என போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் சேலத்தை சேர்ந்த நண்பர் குமார் உதவியுடன் மண்ணச்சநல்லூர் அருகே எதுமலை பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வரும் ரவி என்பவரிடம் வழிப்பறி செய்த நகைகளை விற்பனை செய்ததும் ரவி திருட்டு நகைகளை வாங்குவதில் கைச் சேர்ந்தவர் என்பதும் திருட்டு நகைகளை கம்மியான விலைக்கு வாங்குவதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 8 பவுன் நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.