கரூரில் அதிகாலை நேரத்தில் அமராவதி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தல் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.
கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமராவதி ஆறு பாய்கிறது. மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள இந்த ஆற்றில் வெள்ளக் காலங்களில் மட்டுமே தண்ணீர் வருகிறது. வருடம் முழுவதும் வறண்டே கிடக்கும் நிலை இருந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில், தற்போது விநாடிக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அமராவதி ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றமும், மாவட்ட நிர்வாகமும் தடைவிதித்துள்ள நிலையில், ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இப்பகுதியில் வசிக்கும் ஆண்களில் சிலர் அமராவதி ஆற்றில் இரு சக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையில் மணலை நிரப்பி சட்டவிரோதமாக திருடி வருகின்றனர். நள்ளிரவு தொடங்கி, அதிகாலை வரை ஆற்றில் அள்ளப்பட்ட மணலை மூட்டைகளாக கட்டி இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் வைத்துக் கொண்டு செல்கின்றனர்.
இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 பேர் இது போன்ற நூதன மணல் திருட்டில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் செல்போனில் படம்பிடித்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.