சென்னையிலிருந்து ஜனவரி 29 புதன்கிழமை பிற்பகலில் புறப்பட்ட பல்லவன் விரைவு ரயில் அன்று இரவு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் சென்னையிலிருந்து திருச்சி வந்த சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் காசிநாதன் என்பவர், ரயில் நிலையத்தில் ரோந்துப்பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினரிடம், தனது பெட்டியை யாரோ மாற்றி எடுத்துச் சென்று விட்டதாகவும் தகவல் தெரிவித்தார். நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) திருச்சி கோட்ட முதன்மை ஆணையர் ஜிஎம். ஈஸ்வரராவ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆர்பிஎப் திருச்சி காவல்நிலைய ஆய்வாளர் கே.பி.செபாஸ்டியன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் குருநாதன், லட்சுமணன் உள்ளிட்ட ஆர்பிஎப் படையினர், இது தொடர்பாக துரித விசாரணை மேற்கொண்டனர். குறிப்பிட்ட பயணிகள் பயணித்த ரயில்பெட்டியில் வந்த பயணிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலர் எல்.ராஜகோபாலன் என்பவர் தனது பெட்டியை மாற்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை பெட்டியுடன் ரயில் நிலைத்துக்கு வரவழைத்தனர். வியாழக்கிழமை இருவரும் ரயில் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் இருவரது பெட்டிகளும் அவரவரிடம் ஆர்பிஎப் படையினர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இதில்,
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ராஜகோபாலன் தனது குடும்பத்தினருடன் பயணித்துள்ளார், அவரது பெட்டியில் குடும்பத்தினரின் நகைகள், பட்டுப்புடைவைகள் உள்ளிட்ட சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் இருந்துள்ளன. அவற்றை நேர்மையுடன் ஒப்படைத்துள்ளார் ஓய்வு பெற்ற வங்கி அலுவலர் காசிநாதன். அவருக்கும் அவற்றை மீட்க துரிதமாக நடவடிக்கை எடுத்த ஆர்பிஎப் படையினருக்கும் நன்றி தெரிவித்தும் பாராட்டியும் நகைகள் உள்ளிட்ட பொருள்களுடன் பெட்டியை பெற்றுச் சென்றனர்.