முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்த நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டவருமான நடிகை தர்ஷா குப்தா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
கோவிலுக்குள் சென்ற அவர் மூலவர் முருகன், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகை தர்ஷா குப்தாவுடன் பக்தர்கள், பொதுமக்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அதன் பின் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து விட்டு சென்றதாக தெரிவித்தார். முன்னதாக கடந்த வாரம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்த பிக்பாஸ் வெற்றியாளரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் முருகனை தரிசனம் செய்து விட்டு சென்றதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இன்று நடிகை தீபா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். நடிகை தீபா 2000 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து வாம்மா மின்னல் என்ற காமெடி காட்சியில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருகிறார்.
கோயிலுக்கு வருகை தந்த நடிகை தீபா மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகை தீபாவை அங்கு நின்ற பக்தர்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் கைகொடுத்தும் மகிழ்ந்தனர்.