மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் அதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர் நாளை(31-ந்தேதி) தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 13-ந்தேதி கூட்டத்தொடர் முடிவடைகிறது.
இதனைத்தொடர்ந்து .2-வது பகுதி கூட்டத்தொடர் மார்ச் 10-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி நிறைவடையும்.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நாளை உரையாற்றுகிறார். நாடாளுமன்ற இல்லத்தில் உள்ள மக்களவை கூடத்தில் இதற்கான கூட்டம்நடைபெறும்.
அதனை தொடர்ந்து, ஜனாதிபதி உரையின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். அது பிப்ரவரி 3-ந்தேதி, 4-ந்தேதி மற்றும் 6-ந்தேதி நடைபெறும். இதற்காக அவையின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவார். அதனை மற்றொரு உறுப்பினர் வழிமொழிவார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார். இதில், நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும். அத்துடன் கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொள்வார்.