திருச்சி, உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை மாதம் 3 வது வெள்ளிக்கிழமை வளையல் காப்பு உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டில் குங்குமவல்லி தாயாருக்கு 73 வது ஆண்டு வளைகாப்பு திருவிழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று காலை கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி ஹோம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 10 மணி அளவில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர மாலை 4 மணி அளவில் வளைகாப்பு
சம்பிரதாய பூஜைகள் தொடங்கின. மாலை 4.30 மணிக்கு குங்குமவல்லி தாயாருக்கு அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்பாள் படம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு குங்குமவல்லி தாயாருக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. பெண்கள் சுகப்பிரசவம் வேண்டி இத்தகைய வழிபாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று வளைகாப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.