Skip to content

மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி

டில்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளன. இந்த நிலையில் டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சி  தலைவர் கெஜ்ரிவால் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.  இதில், முதல்வர் அதிஷி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

 “டில்லியில் வேலையில்லாதவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். டில்லியில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பெண்களுக்கான மாதாந்திர நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் மாதம் தோறும் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும். சஞ்சீவனி திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை. தவறான தண்ணீர் கட்டணங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

அடுத்த மூன்று வாக்குறுதிகள், 2020-ம் ஆண்டிலும் நாங்கள் அளித்தோம். 24 மணி நேரமும் தண்ணீர் வழங்குவோம், யமுனையை சுத்தம் செய்வோம், டில்லி சாலைகளை ஐரோப்பிய தரத்துக்கு மாற்றுவோம் என்று கூறியிருந்தோம். ஆனால், இந்த மூன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை. இரண்டரை ஆண்டுகளாக கோவிட்-19 தொற்றுநோய் இருந்தது, பின்னர் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த மூன்று வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
தலித் மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற அம்பேத்கர் உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களின் செலவுகளை டில்லி அரசு ஏற்கும். மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் டில்லி மெட்ரோவில் 50% சலுகை, கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம்தோறும் ரூ.18,000 வழங்கப்படும்.

இலவச குடிநீர், இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வாடகைதாரர்களுக்கும் நீட்டிக்கப்படும். போர்க்கால அடிப்படையில் கழிவுநீர் குழாய்கள் சரிசெய்யப்படும். ஒன்றரை ஆண்டுகளில் பழைய கழிவுநீர் குழாய்கள் மாற்றப்படும். ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம், குழந்தைகளுக்கு இலவச பயிற்சி, ரூ.10 லட்சம் இலவச ஆயுள் காப்பீடு, ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும். தனியார் பாதுகாவலர்களை பணியமர்த்த குடியிருப்பாளர் நல சங்கங்களுக்கு (RWA) நிதி வழங்கப்படும்” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

 

error: Content is protected !!