பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் தைப்பூசம் திருவிழா கடந்த 26ம் தேதி தங்க கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் உற்சவர் மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 9ம் திருநாளான இன்று சமயபுரம் உற்சவர் மாரியம்மன் பவள மாலை, முத்து மாலை, தாமரை மாலை, ரெட்டை கிளி பதக்கம், வைர பதக்கம், தங்க கிரீடம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் எழுந்தருளி
மகா தீபாதாரணைக்கு பின்பு தேரடி வீதி, கடைவீதி வழியாக நான்கு ரோடு பகுதியில் உள்ள தெப்பத்திற்கு உற்சவர் மாரியம்மன் வந்தடைந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து உற்சவர் மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து உற்சவர் மாரியம்மன் கடைவீதி, தேரடி வீதி வழியாக கோவிலை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமயபுரம் கோவில் இணை ஆணையர் திருமதி. கல்யாணி தலைமையில் செய்யப்பட்டிருந்தது. மேலும் தை தெப்பவிழாவான இன்று சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.