நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்நல மையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் பணிபுரியவுள்ள மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 37 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்பான முறையில் பணிபுரிய வாழ்த்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் உன்னத திட்டத்தை அறிவித்ததன் அடிப்படையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டு 07.05.2022 முதல் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர். மருத்துவமனை பணியாளர் என நான்கு பேர் கொண்ட குழுவினர் பணிபுரிவர். காலை, 8 மணி முதல் மதியம், 12 மணி வரை மற்றும் மாலை, 4 மணி முதல் இரவு 8 மணி வரை இம்மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்கு புறநோயாளிகள் சிகிச்சை, தொற்றா நோய் (உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் புற்று நோய்) ஆய்வக பரிசோதனைகள், கர்ப்பிணிகள் மற்றும்
குழந்தைகள் சிசு பராமரிப்பு, இளம் சிறார் மற்றும் வளரிளம் பருவ நலசேவை, குடும்ப கட்டுப்பாடு, தொற்றும் நோய் தடுப்பு. மனநலம் சார்ந்த நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை, பல் பராமரிப்பு, முதியோருக்கான மருத்துவ சேவை, விபத்து மற்றும் ஆரம்ப கால மருத்துவ சேவை என பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சேவையை சிறந்த முறையில் வழங்கிடும் வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 4 மருத்துவ அலுவலர்கள், 15 செவிலியர்கள் மற்றும் 7 மருத்துவ பணியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கும், அரசு கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் வகையில் 1 லேப் டெக்னிசியன், 1 அவசர சிகிச்சை உதவியாளர், 2 மருத்துவமனை உதவியாளர்களும் மேலும் இணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் வகையில் 3 நுண் கதிர் வீச்சாளர், 3 மருத்துவமனை பணியாளர் மற்றும் 1 பாதுகாவலர் உள்ளிட்ட மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 37 நபர்களுக்கு இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பணி உத்தரவினை வழங்கி சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மாநகர நல அலுவலர் விஜயசந்திரன், துணை ஆணையர் பாலு, மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர்கள் முத்துச்செல்வம், மண்டி சேகர், கமால் முஸ்தபா,காஜாமலை விஜய், கலைச்செல்வி,கவிதா செல்வம், ராமதாஸ் ,மஞ்சுளா பாலசுப்பிரமணியன், புஷ்பராஜ்,முன்னாள் கவுன்சிலர் கிராப்பட்டி செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.