டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பருவம் தவறிய மழை மற்றும் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக சம்பா அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும் விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லின் ஈரப்பத அளவை அதிகரித்து அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை ஏற்ற தமிழக அரசு நெல்லின் ஈரப்பதத்தை
17 சதவீதத்திலிருந்து 22 சதவிதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இதையடுத்து தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்ட தன் பேரில் உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குனர் ப்ரீத்தி, தொழில்நுட்ப அலுவலர் அபிஷேக் பாண்டே இந்திய உணவுக் கழக மேலாளர் கிரீஷ், தரக்கட்டுப்பாட்டு முதுநிலை மேலாளர் செந்தில் ஆகிய 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நெல்லின் ஈரப்பதம் மற்றும் சீதோஷ்ண நிலை குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நெல்லின் தன்மைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தனர். தொடர்ந்து விவசாயிகள் நெல்லில் ஈரப்பதம் குறித்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்து தங்களுக்கு ஏற்படும் பேரிழப்புகள் குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து கீழ்மாத்தூர் சேமங்கலம், ஆத்துக்குடி வள்ளுவகுடி கொண்டல் இளந்தோப்பு, மணல்மேடு ஆகிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.