கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறியதாவது:
எங்களுக்கு எதிராக இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி தாக்குதல் தொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். இந்திய அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த வீரர்கள். இதனால் எங்களது பேட்ஸ்மேன்கள் தனிப்பட்ட முறையில் வீரர்கள் திட்டங்கள் வகுத்து, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
டி20 கிரிக்கெட்டில் நாங்கள் எப்போதும் ஆக்ரோஷமாக இருக்கவே முயற்சிக்கிறோம். 2015-ம் ஆண்டு முதல் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நாங்கள் இந்த வழியையே கடைபிடித்து வருகிறோம். அதிலிருந்து ஒருபோதும் நாங்கள் விலகவில்லை. நான் எப்போதும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவதை மிகவும் ரசிப்பேன். ஐபிஎல் தொடரும் உதவியாக உள்ளது. ஏனெனில் அந்த தொடரில் நடக்கும் முக்கிய விஷயம் ஏராளமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பயிற்சி செய்யக்கூடிய நேரம் கிடைக்கும்.
இந்தியாவில் நீங்கள் விளையாடும் ஒவ்வொரு இடமும் கொஞ்சம் தனித்துவமானது . சென்னை ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் கொண்ட பல வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். சென்னை விளையாடுவதற்கு சிறந்த இடம். இது இந்த விளையாட்டுக்கு பல்வேறு சவால்களைக் கொண்டுவருகிறது, வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு விளையாடுவதுதான் இந்த விளையாட்டின் அழகு. இவ்வாறு ஜாஸ் பட்லர் கூறினார்.