சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் காத்பாடா பகுதியைச் சேர்ந்தவர் செரீப் (38). இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுபோனதாக வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர்தான் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து சென்னை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பிடித்து வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த சிறுமி கூறிய தகவல்களால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட அந்த சிறுமி சொந்தமாக வாங்க முடியாத நிலையில் இருந்ததால் ஆங்காங்கே நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கள்ளச்சாவி போட்டு திறந்து ஆசை தீர ஓட்டி மகிழ்ந்து வந்ததாக கூறினார். இவ்வாறு பெட்ரோல் காலியாகும் வரை ஆசை தீர ஓட்டிய பிறகு அந்த இடத்திலேயே அந்த மோட்டார்சைக்கிள்களை விட்டுச்சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தததும் தெரியவந்தது. இவ்வாறு திருவொற்றியூர், பெரும்பாக்கம், வண்ணாரப்பேட்டை உள்பட 4 இடங்களில் சிறுமி திருடி விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான சிறுமியை புரசைவாக்கம் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்..
Tags:சென்னை சிறுமி