அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் வருவதால் அங்கு ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.
இரண்டு பேர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் இவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஸ் சாய் ஆகியோர் , இப்போதுள்ள நிலையை பார்த்தால் இரு தரப்பு வேட்பாளர்களின் மனுவும் நிராகாிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கட்சி விதிகளை மாற்றம் செய்ததை ஏன் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. நாங்கள் அதை தடுக்கவில்லையே என்றனர்.
இருவரும் சேர்ந்து வேட்பாளரை நிறுத்தினால் நான் கையெழுத்திட தயார் என ஓபிஎஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இது நல்ல யோசனையாக இருக்கிறது என நீதிபதிகள் கூறினார்.
அதற்கு எடப்பாடி தரப்பு, எங்கள் கட்சி வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், பழனிசாமி நிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதரிக்க முடியாது. ஒரு பொது வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிக்க தயார் என்று தெரிவித்தனர்.
இதனை கேட்ட நீதிபதிகள், இந்த பிரச்னையை எங்களிடம் விட்டு விடுங்கள். நீங்கள் இருவரும் கையெழுத்து போட வேண்டாம் நாங்கள் உத்தரவு பிறப்பிக்கிறோம், இருதரப்புக்கும் பாதிப்பு இல்லாமல் இந்த இடைத்தேர்தல் நடக்க வேண்டும். இருவரும் பேசி முடிவு எடுங்கள். அப்படியான சூழ்நிலைதானே இருக்கிறது. இருவரும் முரண்டு பிடிக்கிறீர்கள். அதனால் நாங்கள் சில தீர்வுகளை சொல்கிறோம். உங்கள் பிரச்னைகளை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு எங்களால் போய்விட முடியும். பிரதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், நாங்கள் முக்கிய உத்தரவு எதையும் பிறப்பிக்க விரும்பவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யவேண்டும். பொதுக்குழு எடுக்கும் முடிவை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். பொதுக்குழு முடிவுக்கு கையெழுத்திடுவது குறித்து ஓபிஎஸ் முடிவு எடுக்கலாம். வேட்பாளரை தேர்வு செய்யும் பொதுக்குழு முடிவுக்கு கையெழுத்து பெறுவதற்கு ஓபிஎஸ்க்கு அனுப்பலாம். அதில் கையெழுத்திடுவது குறித்து ஓபிஎஸ் முடிவுஎடுக்கலாம். வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், பிரபாகரன் பங்கேற்கலாம். இந்த உத்தரவு இந்த இடைத்தேர்தலுக்கு மட்டும் தான்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து எடப்பாடி தரப்பை சேர்ந்த சி.வி. சண்முகம் எம்.பி. கூறும்போது, பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்டுவார். 7ம் தேதிக்குள் பொதுக்குழுவை கூட்ட கால அவகாசம் இல்லாததால், கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு பெற்று அதை அவைத்தலைவர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்போம் என்றார்.