பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் தமிழில் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. சத்யராஜ், யோகிபாபு, இவானா உள்ளிட்டோர் உடன் நடித்த லவ் டுடே திரைப்படம், சுமாரான பட்ஜெட்டில் தயாராகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தது. தமிழின் வெற்றியை தொடர்ந்து ’லவ் டுடே’ திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. அங்கேயும் வசூல் மழை கண்டுள்ளது லவ் டுடே.திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும்போதே, வணிக ஆதாயத்துக்காக பெரும் தொகைக்கு ஓடிடி உரிமை போணியானது. நெட்ஃபிளிக்ஸில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் தமிழ் பதிப்பு, இந்திய அளவில் டாப் 10 வரிசையில் முன்னிலை பெற்றுள்ளது. படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து, லவ் டுடே திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடாகி வருகிறது.இன்றைய இளம் தலைமுறையினரின் பல்ஸ் பார்த்து, அவற்றை திரையில் பிரதிபலிக்கும் காட்சிகள் நிறைந்திருப்பதால் இந்தி ரீமேக் முயற்சிகளுக்கு போட்டி நிலவியது. தற்போதைய நிலவரப்படி நாயகனாக வருண் தவான் நடிக்க உள்ளதாகவும், திரைப்படத்தை இயக்கப்போவது பிரதீப் ரங்கநாதனா அல்லது எவரேனும் பாலிவுட் இயக்குநரா என்று பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.