Skip to content

வாழ்த்திய மாணவியை நேரில் அழைத்து நன்றி தெரிவித்த கரூர் கலெக்டர்

  • by Authour

கரூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் “பாலம்” திட்டத்திற்காக கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு “எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ்” விருது புது டில்லியில் நடைபெற்ற விழாவில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்கி  கவுரவித்தார்.

நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் மக்களுக்கு பயன்படும் வகையில் திட்டங்களை செயல்படுத்தும் ஆட்சித்தலைவர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் வகையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் விருதுகளை வழங்கி சிறப்பிக்கின்றது. எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ் அவார்டு (Excellence in Governance Award) என்ற பெயரில் வழங்கப்படும் மேற்படி விருதுகள் 18 பிரிவுகளில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டது.

அண்மையில் கரூர் மாவட்ட ஆட்சியர் இந்த விருதை பெற்றார். இது குறித்த தகவலை செய்தித்தாள் மூலமாக கரூர் மாவட்டம், புகழூரில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பள்ளியில் சிபிஎஸ்சி பாடப்பிரிவில் எட்டாம் வகுப்பு படித்து வரும் ரோஷினி என்ற மாணவி படித்து தெரிந்து கொண்டார். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியருக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ளும் விதமாக மாணவி ரோஷினி கடிதம் ஒன்றை எழுதி தபால் மூலமாக ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தை பார்த்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று அந்த மாணவியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

பெற்றோருடன் ஆட்சியரை நேரில் சந்தித்த மாணவிக்கு பரிசு மற்றும் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கியதோடு, செய்தித்தாள் படிக்கும் பழக்கத்திற்காக பாராட்டு தெரிவித்தார். மேலும், தனக்கு கொடுக்கப்பட்ட விருதை அந்த மாணவியிடம் காட்டி மகிழ்ந்ததோடு, மீண்டும் ஒருமுறை மாணவிக்கும், அவரது பெற்றோருக்கும் நன்றி தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் தன்னை நேரில் அழைத்து பாராட்டியது தனது தனக்கு மிக்க மகிழ்ச்சி என்று மாணவி ரோஷினி தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!