Skip to content

தஞ்சையில் அகில இந்திய பாரா வாலிபால் போட்டி….. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கில் மூன்று நாட்கள் நடக்கும் பாரா வாலிபால் போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடக்கி வைத்தார். இப்போட்டிகள் வரும் 5ம் தேதி வரை நடக்கிறது.

இந்திய பாரா லிம்பிக் வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலிபால்  சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலிபால் சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், ஐ.ஓ.பி., தஞ்சாவூர் மாநகராட்சி ஆகியவை இணைந்து அகில இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 11-வது அகில இந்திய பாரா வாலிபால் போட்டிகள் இன்று முதல்  5ம் தேதி வரை தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கில் நடத்துகிறது.

இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, உத்தர்காண்ட் உள்ளிட்ட 15 மாநிலங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 1956ம் ஆண்டில் அறிமுகம் ஆகி உலக அளவில் இப்போட்டிகள் நடந்து வருகிறது. 78 நாடுகள் இப்போட்டிகளை நடத்தி வருகின்றன. இப்போட்டிகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணி வீரர்கள் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.

மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இந்திய பாரா வாலிபால் சங்கத் தலைவர் சந்திரசேகர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அன்புராஜ், பி.சி.ஐ, நிறுவன செயலாளர் மகாதேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநில தலைவர் டாக்டர் மக்கள் ஜி.ராஜன் வரவேற்றார். மாநில பொதுச்செலாளர் ராஜா நன்றி கூறினார்.அர்ஜூனா விருது பெற்ற பத்மஸ்ரீ கிரிஸ், பத்மஸ்ரீ சுக்வீர் சிங், பி.சி.ஐ. முன்னாள் செயலாளர் சந்திரசேகர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, எம்எல்ஏக்கள் திருவையாறு சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வேலுசாமி, தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்க தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியிலிருந்து வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உலக அளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *