Skip to content

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என  தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இதற்காக திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் செல்லும் வழியில் எலந்தபட்டி  பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில்  இடம்  தேர்வு செய்யப்பட்டது. தமிழக துணை முதல்வர்  உதயநிதி இதற்கு  காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.

அதைத்தொடர்ந்து இன்று  எலந்தப்பட்டியில்  ஒலிம்பிக் அகாடமிக்கான  பூமிபூஜை நடந்தது. நகர்ப்புற வளர்ச்சித்  துறை அமைச்சர் கே என் நேரு,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி மையத்திற்காக  பூமிபூஜை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில்  கலெக்டர் பிரதீப் குமார், திட்ட இயக்குனர் கங்காதரணி, திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், திருவறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், மற்றும் அண்ணாதுரை, விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரிகள் , மாணவ, மாணவிகள் மற்றும் எலந்தப்பட்டி கிராம பொதுமக்கள் திரளாக  கலந்து கொண்டனர்.

இந்த பணிகள் குறித்து அமைச்சர்  கே என் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒலிம்பிக் அகாடமி  50 ஏக்கர் பரப்பளவில் இந்த இடத்தில் அமைகிறது. இதற்கான அடிக்கலை ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நாட்டியுள்ளார்.  இந்த பகுதி மக்களுக்கு இதை  தெரிந்து கொள்ளும்வகையில்  இன்று முறைப்படி பணிகளை தொடங்கி வைத்துள்ளோம்.  இந்த பணிகள்  2 கட்டமாக நடைபெறும். மொத்த  பணியும் 18 மாதத்தில் நிறைவடையும் .

இந்த அகாடமியில் அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.