கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற எம்பி தேர்தலின்போது வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில், கடந்த 3-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். காட்பாடியில் உள்ள எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு, கிரிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.28 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், கிரிஸ்டியான்பேட்டை பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, விசாரணை நடத்த, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் படி கதிர் ஆனந்த் எம்.பி.க்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. நேற்று காலை 10.45 மணி அளவில் ஆஜரானார். அவரிடம் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களை காண்பித்து அது குறித்து விசாரணை நடத்தினர். மேலும், சில சொத்துகள் வாங்கப்பட்டது, சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் உள்பட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த கதிர் ஆனந்த், சில கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்தாக கூறப்படுகிறது. அவர் அளித்த தகவல்களை அமலாக்கத்துறையினர் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். மேலும், வீடியோவாகவும் பதிவு செய்தனர். தேவைப்பட்டால், மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கூறி, விசாரணைக்கு பிறகு அவரை அனுப்பி வைத்தனர். இந்த விசாரணை 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கதிர் ஆனந்த் எம்பியிடம் 8 மணிநேரம் E.D விசாரணை
- by Authour
Tags:E.D Interrogationkathir anand mpKingston College of Engineeringகதிர் ஆனந்த்கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி