தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தை யின் செயல்பாடுகள்குறித்து கலெக்டர் மு.அருணா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உழவர் சந்தை முழுவதும் அவர் சுற்றிப்பார்த்தார். ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரம் செய்து கொண்டிருந்த விவசாயிகளைப்பார்த்து, இங்கு உங்களுக்க எதுவும் பிரச்னை உள்ளதா, தினமும் இங்கு என்ன பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்கிறீர்கள், தினமும் எவ்வளவு விற்பனை செய்கிறீர்கள், உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா, மேலும் என்ன செய்யலாம் என்பது குறித்து விவசாயிகளிடமும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடமும் கலெக்டர் விசாரித்தார்.
அவர்கள் கூறிய கருத்துக்களை கேட்ட கலெக்டர் அருணா இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதைத்தொடர்ந்து புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் காலை உணவு தயார் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கும் இடத்திலும் கலெக்டர் அருணா ஆய்வு மேற்கொண்டார். பணிகள் மற்றும் உணவின் தரம்குறித்து ஆட்சியர் அருணா நேரில் பார்வையிட்டு உணவினை
சாப்பிட்டு பார்த்தார்.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை எந்த காரணத்தைக்கொண்டும் குறைக்கக்கூடாது. சுகாதாரமான முறையில் உணவு இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் த.நாராயணன், தனித் துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபா, புதுக்கோட்டை வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.