டில்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ தனது முதல் தேர்தல் அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம், பெண்கள், முதியவர்களுக்கு மாதம் ரூ.2500, கியாஸ் சிலிண்டர் ரூ.500, ஹோலி, தீபாவளிக்கு தலா ஒரு கியாஸ் சிலிண்டர் இலவசம் என்று பெண்களை குறிவைத்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது. நேற்று 2வது தேர்தல் அறிக்கையை பா.ஜ எம்பி அனுராக் தாக்கூர் வெளியிட்டார். அதில்
* ஏழை மாணவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் கே.ஜி(கிண்டர் கார்டன்) முதல் பி.ஜி(முதுகலை பட்டப்படிப்பு) வரை இலவசக் கல்வி வழங்கப்படும்.
** டில்லி இளைஞர்கள் யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு ரூ.15,000 நிதி உதவி வழங்கப்படும். இரண்டு முறை பயணக் கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் வழங்கப்படும்.
* டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து ‘‘முறைகேடுகள் மற்றும் ஊழல்கள்” குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்படும் .
* பாலிடெக்னிக் மற்றும் திறன் மையங்களில் உள்ள எஸ்சி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவி வழங்க டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உதவித்தொகை யோஜனா தொடங்கப்படும்.
* வீட்டுப் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்களுக்கான நல வாரியங்கள் அமைக்கப்படும். அவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை வாரியங்கள் வழங்கும்.
* வீட்டுப் பணிப்பெண்களுக்கு ஆறு மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.