பெரம்பலுார் மாவட்டம், கைகளத்துார் கிராமத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., ஆதர்ஷ் பச்சேரா, திருச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது…
பெரம்பலுார் மாவட்டம், கைகளத்துார் கிராமத்தில் கடந்த 17ம் தேதி காலை 8:00 மணியளவில், டீக்கடையில் தேவேந்திரன், மணிகண்டன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அந்த கோபத்தில், காலை 9:45 மணி அளவில் தேவேந்திரன், அரிவாளால் வெட்டியதில், மணிகண்டன் இறந்தார். கொலை சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொலை சம்பவத்தை தொடர்ந்து, கிராம மக்கள், கைகளத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, உள்ளே நுழைந்து இரண்டு கம்ப்யூட்டர், டேபிள், சேர்கள் மற்றும் ஜன்னலை உடைத்து விட்டனர்.
தகவல் அறிந்து நானும், டி.எஸ்.பி.,யும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அந்த சம்பவத்தை கட்டுப்படுத்தி விட்டோம். தொடர்ந்து, ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி இறந்தவர் சடலத்தை உறவினர்களிடம் கொடுத்து விட்டோம். அவர்கள், உடலை அடக்கம் செய்து விட்டனர். இறந்தவருக்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து, பொருட்களை உடைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாதிப் பிரச்னையில் கொலை சம்பவம் நடந்ததாக, ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இருவருக்கு இடையேயான தனிப்பட்ட முன் விரோதம் காரணமாகவே, கொலை சம்பவம் நடந்துள்ளது என்பது தான் உண்மை.
தனிப்பட்ட முன் விரதம் காரணமாக, கொலை சம்பவம் நடந்தவுடன், அவரது உறவினர்கள் ஆத்திரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பொருட்களை உடைத்துள்ளனர். அதில் கட்சியினர் யாருக்கும் சம்பந்தமில்லை. டீக்கடையில் தகராறு ஏற்பட்டவுடன் மணிகண்டன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வாய்மொழியாக புகார் அளித்துள்ளார். அப்போது, வேறு ஒரு தரப்பு புகாரை விசாரித்த போலீசாருக்கு, அதில் சம்பந்தப்பட்ட இடம் தெரியவில்லை.
அங்கிருந்த மணிகண்டன் தானாக முன்வந்து, அந்த இடத்தை அடையாளம் காட்டுவதாக கூறியுள்ளார். அதனால் ஏட்டு ஸ்ரீதர், அவரை அழைத்துக் கொண்டு வேறொரு தரப்பு புகார் தொடர்பான இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த தேவேந்திரன் அரிவாளால் மணிகண்டனை வெட்டியுள்ளார்.
ஒரு புகார் சம்பந்தமான விசாரணைக்கு, வேறு நபர்களை போலீசார் அழைத்துச் செல்லக்கூடாது. மணிகண்டனை அழைத்துச் சென்றதால் தான், ஏட்டு ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொலை சம்பவம் நடந்த இடத்தில், போலீஸ் தரப்பில் முறையாக செயல்பட்டுள்ளனர். தற்போது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள ஏட்டு ஸ்ரீதர் தான், மணிகண்டனை வெட்டிய தேவேந்திரனை பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு தான், கிராம மக்கள் ஸ்டேஷனுக்கு சென்று பொருட்களை உடைத்துள்ளனர்.
சம்பவம் நடந்த போது, ஏட்டு வாகனத்தில் இருந்துள்ளார். இடத்தை அடையாளம் காட்டச் சென்ற மணிகண்டன் மட்டும் கீழே இறங்கிய போது, அங்கு வந்த தேவேந்திரன் வெட்டியதை, ஏட்டு ஸ்ரீதர் தான் தடுத்து, அவரை பிடித்து, போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றுள்ளார். கொலை சம்பவம் நடந்த போது, ஏட்டு ஸ்ரீதருடன் ஊர்க்காவல் படையை சேர்ந்த பிரபு என்பவர் இருந்ததாக கூறுவது தவறான தகவல். கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், மூன்று பேர் குற்றவாளிகளாக காட்டப்பட்டுள்ளனர். அதில், மூன்றாவது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஏட்டு ஸ்ரீதர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.