தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பருத்திக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2009-ல் தனது மனைவி விஜயராணி இறப்பிற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக கொடுக்கப்பட்ட குடும்ப அட்டை மற்றும் உழவர் அட்டை பெற கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகினார்.
அப்போது பருத்திக்கோட்டை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த மா.தனபாலசுப்பிரமணியன் (72) குடும்ப அட்டை மற்றும் உழவர் அட்டை திரும்ப பெற்று தர ரூ.700 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜேந்திரன் இதுகுறித்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் படி ராஜேந்திரன் கிராம நிர்வாக அலுவலர் தனபாலசுப்பிரமணியனிடம் பணம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனபாலசுப்பிரமணியனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சண்முகப்பிரியா விசாரித்து தனபாலசுப்பிரமணியனுக்கு ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 7-ன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பாக டிஎஸ்.பி. ஆர். அன்பரசு நேரடி பார்வையில் அரசு வக்கீல் எஸ்.முகம்மது இஸ்மாயில், இன்ஸ்பெக்டர் இரா. அருண்பிரசாத், எஸ்.எஸ்.ஐ., சி. அய்யப்பன் மற்றும் மு. செல்வம் ஆகியோர் வழக்கை திறம்பட நடத்தினர்.