Skip to content

தஞ்சை டிராவல்ஸ் நிறுவன மோசடி வழக்கு…. உரிமையாளரின் மைத்துனர் கைது..

தஞ்சாவூர் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் தஞ்சாவூர் ரஹ்மான் நகரில் வசித்து வந்தார். இவர் ‘ராஹத் டிராவல்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ராஹத் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் ஈவுத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார், இதனை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். வெளிநாட்டில் வசித்தவர்களும் முதலீடு செய்தவர்கள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சரியாக ஈவுத் தொகை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமாலுதீன் இறந்து விட்டார்.

இதையடுத்து ராஹத் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தங்களின் ஈவுத்தொகை மற்றும் முதலீட்டு தொகையை கேட்டனர். ஆனால் கமாலுதீன் இறப்புக்கு பிறகு அவரது குடும்பத்தினர், முதலீடு செய்தவர்களுக்கு ஈவுத்தொகை மற்றும் முதலீடு தொகை வழங்கவில்லை. மேலும் கமாலுதீன் இறந்து விட்டதால் தங்களுக்கு இதுகுறித்து தெரியாது என்றும் தெரிவித்ததாக முதலீட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் முதலீட்டாளர்கள் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர். தொடர்ந்து இந்த புகார் மனுக்கள் திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. ராஹத் டிராவல்ஸ் நிறுவனம் சுமார் ரூ.400 கோடி வரை மோசடி செய்ததாக, சுமார் 6,000 பேர் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக, 2021ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கமாலுதீன் மனைவி ரெஹானா பேகம், சகோதரர் அப்துல் கனி, நிறுவனத்தின் மேனேஜர் நாராயணசுவாமி உட்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு குறித்த குற்றப்பத்திரிக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த கமாலுதீன் மைத்துனரான அப்துல்ரசீது மகன் சுஹைல் அகமது (36), வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், சுஹைல் அகமது காத்தார் நாட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வருவதாக திருச்சி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் திருச்சி விமான நிலையத்தில், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார், காத்தாரில் இருந்து வந்த சுஹைல் அகமதை, கைது செய்து இன்று மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும், இவ்வழக்கில் டிராவல்ஸ் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முதலீட்டாளர்களை விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகளும் நடந்து வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.