Skip to content
Home » புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது

புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம்  வெங்களூரை சேர்ந்தவர் ஜகுபர் அலி(50), சமூக ஆர்வலர், அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.   இவர் சில  வருடங்களுக்கு முன்  அருகில் உள்ள துளையானூரில் ஒரு  கல்குவாரியில் வேலை செய்து வந்தார்.  மாவட்ட அமைச்சூர் கபடி கழக  செயலாளராகவும் இருந்தார்.  சில வருடங்களுக்கு முன்  வேலையில் இருந்து  நின்று விட்டார்.

இந்த நிலையில்  இவர்  கல்குவாரிகளில் முறைகேடு நடப்பதாக  அரசுக்கு புகார் மனுக்கள் அனுப்பி வந்தார்.  கடந்த 18ம் தேதி மதியம்  ஜகுபல் அலி  டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதி இறந்தார்.  இது குறித்து திருமயம் போலீசார்  விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஜகுபர் அலியின்  மனைவி  மரியம், திருமயம் போலீசில் கொடுத்த புகாரில் தனது கணவர்  லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதாக  புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில்   லாரி ஏற்றி கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பேரில் லாரி டிரைவர் கார்த்திகேயன்,  குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராசு, அவரது மகன் தினேஷ்,  முருகானந்தம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். குவாரி  உரிமையாளர்களில் ஒருவரான  ராமையா என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.கைதான 4 பேரும் திருமயம் கோாட்டில் ஆஜர் செய்யப்பட்டனர்.  அவர்களை வரும் 3ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி  கோபால கண்ணன் உத்தரவிட்டார்.