திருச்சி மாநகராட்சிக்கு அருகில் உள்ள 22 கிராம ஊராட்சிகளை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது, அன்று முதல் கிராம மக்கள் தங்களது கிராமத்தை மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட குமாரவயலூர் பஞ்சாயத்தை, திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மற்றும்
பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய, விவசாயத்தை மையமாகக் கொண்டு வாழை மற்றும் நெல் பயிரிடப்பட்டு வரும் இந்த பஞ்சாயத்தை மாநகராட்சி உடன் நினைத்தால் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதுடன் மக்களின் பொருளாதார பின்னுக்குத் தள்ளப்படும் எனவே இதனை இணைக்க கூடாது அவ்வாறு மீறி இணைக்கும் பட்சத்தில் திருச்சிக்கு வருகிற 28ஆம் தேதி வருகை தர உள்ள இந்திய குடியரசுத் தலைவர் திருமதி.திரெளபதி முர்மு அவர்களை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.