மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது, “நான் இதைச் செய்யவில்லை. இதைச் செய்தவர்கள், ஏன் கைது செய்யப்படவில்லை?” என்று சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் கூறினார். தண்டனை விவரத்தை 20ம் தேதி(இன்று) பிற்பகல் 2. 40 மணிக்கு அறிவிப்பதாக நீதிபதி கூறினார். அதன்படி இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு அரசு சார்பில் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சஞ்சய் ராய்க்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
அக்டோபர் 7, 2024 அன்று இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சீல்டாவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணையை நடத்தியது. விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் 18ம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. ஒரே குற்றவாளி சஞ்சய் ராய் என்று சிபிஐ ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறது.
இந்த வழக்கில் சஞ்சய் ராய்க்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு நீதிபதி, ஆயுள் தண்டனையே விதித்தார்.