கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, இவர் கங்கா நகர் சந்திப்பில் உள்ள தனக்கு வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு சுமார் 7.00 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (24) என்ற இளைஞர் மளிகை கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளார். கடைக்காரர் சுப்பிரமணி சிகரெட் இல்லை என்று கூறியதால், 2 ரூபாய்க்கு பீடி மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் அப்பகுதிக்கு வந்த முகமது அன்சாரி, பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி திரியை பற்ற வைத்து, மளிகை கடை மீது வீசி உள்ளார். பெட்ரோல் குண்டு வெடித்ததில் கடையின் முன்பு அடுக்கி வைத்திருந்த 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் மற்றும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த தின்பண்டங்களும் எரிந்து கருகின. அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் கூடியதால் முகமது அன்சாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்று காலை அதேப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே அன்சாரி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவரை பிடிக்க சென்ற போது தப்பி ஓடிய நிலையில் அன்சாரி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். முகமது அன்சாரி மீது இவர் மீது கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை, வெங்கமேடு காவல் நிலையம் மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காவல் நிலையம் உட்பட மொத்தம் 10 வழக்குகள் விசாரணையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.